தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப்பாடமாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழின் பெருமை, தமிழ்க் கலாச்சாரத்தின் வளமை, தமிழர் நாகரிகத்தின் பழமை என நாமெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற எளிய இலக்கைக் கூட நம்மால் எட்ட முடியவில்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும். இந்த நிலைக்காக அனைவரும் வருந்த வேண்டும்.
பெங்களூரில் கடந்த வாரம் நடைபெற்ற கன்னட கல்விக் கழகத்தின் 85-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடகத்தில் அனைத்துக் கல்வி வாரிய பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கன்னடம் கட்டாயப் பாடம் ஆக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதற்காக 2015-ஆம் ஆண்டில் தனிச்சட்டமே இயற்றப்பட்டிருக்கிறது. தென்னக மாநிலங்களாக கேரளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 2018-ஆம் ஆண்டு முதல் அனைத்து வகை பள்ளிகளிலும் முறையே மலையாளம், தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் இன்னும் முன்பாகவே 2013-14 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் 2017-ஆம் ஆண்டு முதல் அனைத்து வகை பள்ளிகளிலும் வங்க மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தான் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப்பாடம் என்ற கனவு இன்னும் நிறைவேறாமலேயே இருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்படாமாக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அது இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படாமல் இருப்பது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே பட்டப்படிப்பு வரை படிக்கலாம் என்ற அவல நிலை இப்போது வரை நீடிக்கிறது. இந்த நிலைக்கு முடிவுக்கு கட்ட வேண்டும் என்ற உறுதியுடன், பா.ம.க. தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக கடந்த 2006-ஆம் ஆண்டில் ‘தமிழ்நாடு தமிழ் கற்றல் (தமிழ் பாடத்தைக் கட்டாயமாக்குதல்) சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. அச்சட்டப்படி, 2006-07 கல்வியாண்டில் மாநிலப் பாடத்திட்டம் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டது.
அதன்பின் ஆண்டுக்கு ஒரு வகுப்பு வீதம் நீட்டிக்கப்பட்டு வந்த அச்சட்டம் 2015-16 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் தமிழைப் படிக்காமல் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், சில தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சில பள்ளிகளுக்கு விலக்கு அளித்ததால் இன்று வரை 10-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் என்ற நோக்கம் நிறைவேறவில்லை. அதன்பின் இன்று வரை உயர்நீதிமன்ற தீர்ப்பை மாற்றி தமிழைக் கட்டாயப்பாடமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது துரதிருஷ்டவசமானது.
தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு ஆண்டிலும் எந்தெந்த வகுப்புகளுக்கு தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது என்பது குறித்து கல்வித்துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும். ஒன்பதாவது வகுப்பு வரை தமிழை கட்டாயப்பாடமாக கற்றுக் கொடுத்ததாக அறிக்கை அளித்த பள்ளிகள், பத்தாவது ஆண்டில் மட்டும் தங்களிடம் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தமிழ் கற்றுத்தர இயலவில்லை என்று கூறுவது ஏமாற்று வேலை. இதை உயர்நீதிமன்றத்திடம் தமிழக அரசு சுட்டிக்காட்டியிருக்கலாம். இப்போது கூட இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து தமிழை கட்டாயப் பாடமாக்க முடியும்.
மாநிலப் பாடத்திட்டம் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டு, 8 ஆண்டுகள் கழித்து 2015-16 ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயமாக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் ஐந்தாண்டுகள் ஆகியும் அந்த அரசாணை செயல்பாட்டுக்கு வரவில்லை. தமிழகத்திலுள்ள 80 விழுக்காடு பள்ளிகளில் இன்று வரை தமிழ் கற்பிக்கப்படவில்லை. இந்திய இடைநிலை கல்விச் சான்றிதழ் (ICSE) பாடத்திட்டம், இந்தியப் பள்ளித் தேர்வு சான்றிதழ் குழு (CISCE) பாடத்திட்டம், கேம்பிரிட்ஜ் வாரியப் பாடத்திட்டம் ஆகியவற்றில் தமிழ்ப் பாடத்தை கட்டாயம் ஆக்குவதற்கான எந்த முயற்சியும் இன்னும் தொடங்கப்படவில்லை. இது பெருமைக்குரிய விஷயமல்ல.
தமிழ்நாட்டில் அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாக்க சட்டப்படி எந்தத் தடையும் இல்லை. இன்னும் கேட்டால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் தமிழைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்திருக்கிறது. தமிழகத்தில் தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 18.02.2008 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,‘‘அரசியல் சட்டத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவுகளின்படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த உரிமையையும் தமிழ் கட்டாயப் பாட சட்டம் பறிக்கவில்லை. உள்ளூர் மொழியை கற்றுக்கொள்வது குழந்தைகளின் நலனுக்கு மிகவும் நல்லது. மாறாக உள்ளூர் மொழியை கற்றுக்கொள்ள மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல’’என்று கூறி கண்டனம் தெரிவித்திருந்தது.
இவ்வாறாக மக்களின் உணர்வும், நீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப்பாடமாக்க அரசுக்கு தடையாக இருப்பது எதுவென்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் தமிழை நேசிக்காத எந்தக் கல்வி முறையும் முன்னேற முடியாது. எனவே, உயர்நீதிமன்றத்தை அணுகி பத்தாம் வகுப்பில் தமிழைக் கட்டாயப் பாடமாக படிப்பதில் இருந்து சில பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கும் தீர்ப்பை ரத்து செய்ய வைக்க வேண்டும். அதன்பின் உரிய ஆணைகளை பிறப்பித்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கல்வி வாரியப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப்பாடமாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.