தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18,19 ஆகிய தேதிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் கூடிய சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சித்திரைத் திருவிழாவில் மின்வெட்டு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதற்கு பதிலாக சூசகமாக, சித்திரைத் திருவிழாவில் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. செல்லூர் ராஜூவின் இந்த பேச்சுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க எழுந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டாம் என தடுத்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜி அமர்ந்துவிட்டார்.
இந்நிலையில் செல்லூர் ராஜூவிற்கான பதிலை ட்விட்டர் மூலமாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'தமிழ்நாட்டில் மின் தடை இல்லை என தெரிந்து 'தடை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்கிறார் தெர்மோகோல் விஞ்ஞானி. எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்' என்று கலாய்த்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அணில்களால் மின்தடை ஏற்படுவதாக, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதும், அதற்கு முன்பே அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ வைகை நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோலை மிதக்க விட்டதும் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மின் தடை இல்லை என தெரிந்து 'தடை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்கிறார் தெர்மோகோல் விஞ்ஞானி.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) April 8, 2022
எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்.