கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ள நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
மாலை 4 மணி காங்கிரஸ் 136 இடங்களிலும், பாஜக 64 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. இதில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக 96 இடங்களிலும், பாஜக 45 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா தலைவர் டி.கே. சிவகுமார் போட்டியிட்ட கனகபுரா தொகுதியில் 1,43,023 வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக் வெறும் 19,753 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதேபோல், இந்தத் தொகுதியில், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் நாகராஜு 20,631 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். அதன்படி டி.கே. சிவகுமார் 1.22 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
டி.கே. சிவகுமாரை எதிர்த்து கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகளில் டி.கே. சிவகுமார் மட்டும் 75% வாக்குகளை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் அமைச்சர் அசோக் வெறும் 10.36% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
சித்தாபூர் தொகுதியில் போட்டியிட்ட 40 கிரிமினல் வழக்குகளைக் கொண்ட பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் தலைவரின் மகன் பிரியங்க் கார்கேவிடம் சுமார் 13,638 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட பிரியங்க் கார்கே 81,088 வாக்குகளும், 67,450 வாக்குகளும் பெற்றுள்ளனர். கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு மணிகண்ட ரத்தோட் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அதில் அவர், ‘மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தை அழித்துவிடுவேன்’ எனப் பேசியதாக இருந்தது. இந்த ஆடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.