அண்ணாமலை பா.ஜ.க தலைவராக இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று முன்னாள் எம்.எல்.ஏ.வும், திரைப்பட நடிகருமான எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.வி. சேகர் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது இனிமேல் தான் தெரிய வரும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வந்தாலும் 2026 ஆம் ஆண்டு கூட இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை.
அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிராக அனைத்து விஷயங்களையும் செய்கிறார். அண்ணாமலை இருக்கும் வரை அதிமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அதேபோல், தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவராக அண்ணாமலை தொடர்ந்து இருந்தால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்பு இல்லை. காசு கொடுத்து, பிரியாணி கொடுத்து தினமும் 300 பேர் பஸ் ஸ்டாண்ட் வரை நடப்பதால் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது?
அண்ணாமலை தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க.வில் நான் இருக்க மாட்டேன். அதைப் பற்றி மோடி என்னிடம் கேட்கட்டும். அதற்கு நான் பதில் கூறுகிறேன். அண்ணாமலை போன்றவர்கள் தலைமையில் தனித்து இயங்குவது படு வேஸ்ட். அண்ணாமலை நின்ற தொகுதியிலேயே அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவரும், சீமானும் ஒரே தொகுதியில் நின்றாலும் அவரை விட சீமான் தான் அதிகமான வாக்குகள் பெறுவார். இந்தியாவில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான். தி.மு.க அரசு கொண்டு வந்த காலை உணவுத் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்க விஷயமாகும்” என்று கூறினார்.