“சூத்திரர்களை பெண்களை இழிவானவர்கள் ஆக்கியது மனு” என தோள் சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த 1822 ஆம் ஆண்டு சாதிய கட்டமைப்பிற்கு எதிராக நடந்த தோள் சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா திடலில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்றனர். பீட்டர் அல்போன்ஸ், கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய முதலமைசர் மு.க.ஸ்டாலின், “தோள் சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழாவில் நான் பங்கெடுப்பதில் மிகுந்த பெருமைப் படுகிறேன். இன்று கல்வியில் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நாகரீகத்தில் தமிழ்நாடு எவ்வளவோ உயரங்களை எட்டியுள்ளது. இத்தகைய உயரத்தில் தான் 50 ஆண்டுகள் முன் இருந்தோமா என்றால் இல்லை. இப்படிப்பட்ட உயரத்தில் தான் 100 ஆண்டுகள் முன் இருந்தோமா என்றால் இல்லை. ஒரு காலத்தில் அனைத்து உணவு விடுதிகளுக்கும் அனைவரும் போய்விட முடியாது. பஞ்சமர்கள் உள்ளே வரக்கூடாது என்றும் நாடகக் கொட்டகைகள் போன்றவற்றிலும் உள்ளே வரக்கூடாது என்றும் போர்டுகள் மாட்டப்பட்டு இருக்கும். ரயில் போக்குவரத்து அறிமுகமானபோது ஒவ்வொரு வர்ணத்திற்கும் தனித்தனி பெட்டிகள் ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 80 வயது கடந்தவர்களுக்கு தான் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தில் நடந்த மாற்றங்கள் குறித்து தெரியும். அப்படிப்பட்ட கால மாற்றத்தை உணர்த்தும் நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
நேற்று கீழடியில் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தேன். உலகம் நாகரீகம் அடைவதற்கு முன் ஆடை அணிந்து வாழ்ந்தது மட்டுமல்ல அணிகலனும் அணிந்து வாழ்ந்த இனம் தான் தமிழினம். அதைத்தான் கீழடி காட்டுகிறது. ஆனால், இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்பினால் தமிழினத்தின் பண்பாடு சிதைக்கப்பட்டு விட்டது. மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் சாத்திர சம்பிரதாயங்களின் புராணங்களின் பெயரால் மனிதர்களை மனிதர்கள் பாகுபடுத்திவிட்டார்கள். ஆணுக்கு பெண் அடிமை என்று ஆக்கிவிட்டார்கள். சூத்திரர்களை பெண்களை இழிவானவர்கள் ஆக்கியது மனு. தீண்டாமையை புனிதமாக்கினார்கள். பெண்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டார்கள். இதற்கு எதிராக அருள் பிரகாச வள்ளலாரும், அயோத்திதாசரும், வைகுண்டரும், பெரியாரும் முன்னெடுத்த சீர்திருத்தங்கள் தான் தமிழகத்தை தலை நிமிர வைத்துள்ளது. பக்தி வேறு பாகுபாடு என உணர்த்தியவர்கள் இந்த தலைவர்கள்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் அனுபவித்த துன்பங்களும் துயரங்களும் மற்ற பகுதிகளில் இல்லாதது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் மார்பில் சேலை அணியக்கூடாது என்ற இழி நிலை நிலவியது. அதையும் மீறி சேலை அணிந்த பெண்கள் தாக்கப்பட்டார்கள். இதைவிட கொடுமையாக ‘முலை வரி’ என்ற வரியை போட்டார்கள். அப்படி வரி கட்டாத காரணத்தால் தன் மார்பையே அறுத்தெடுத்தாள் ஒரு பெண். இந்த வரிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. சீர்திருத்த கிறிஸ்துவ இயக்கத்தினர் இந்த போராட்டத்திற்கு துணையாக இருந்தனர். வைகுண்டர் ‘தாழக் கிடப்போரை தற்காப்பது தான் தர்மம்’ என சொன்னார். மேலும், சிதறிக் கிடந்த மக்கள் ஒன்று சேர்ந்து போராடினால் அனைத்து துன்பங்களும் ஒழியும் எனச் சொன்னார். இதன் விளைவாக 1859 ஆம் ஆண்டு தோள் சீலை அணியலாம் என்ற உத்தரவை அரசர் போட்டார். போராட்டத்தில் போராடியவர்கள் எல்லாம் நாம் வணங்கத்தக்கவர்கள்.” எனக் கூறினார்.