சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன் மொழிந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வரவேற்று பேசிய அமைச்சர் துரைமுருகன் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “அரசியல் சட்டத்திற்கு எதிர்ப்பாக இருப்பவர் இந்தியக் குடிமகனாக இருப்பதற்கே லாயக்கு அற்றவர். உங்களுக்கு ஒரு கட்சியின் கொள்கை இருந்தால் ராஜினாமா செய்துவிட்டுச் செல்லுங்கள். பழைய மு.க.ஸ்டாலினுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எவ்வளவு வித்தியாசம். அவர் பாதி கலைஞர், பாதி அண்ணா ஆகிவிட்டார். நானே ஆச்சரியப்படுகிறேன்.
குடியரசு தின விழாவில் ஆளுநர் மாளிகை விருந்துக்கு நாங்கள் போகப்போவதில்லை என முடிவு செய்துவிட்டோம். ஆனால் அவராக ஃபோன் செய்தார். தொடர்ந்து நான், முதல்வர், உதயநிதி ஸ்டாலின் போனோம். அங்கு வந்திருந்தவர்கள் யாரென்றே தெரியவில்லை. அது வேறு கும்பல். அங்கு இந்திய வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக, இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் என்று படம் போடுகிறார்கள். அதில் கோகலே போன்ற அனைவரும் வருகிறார்கள். ஆனால் திருப்பி திருப்பி சவார்க்கர் வருகிறார். அந்த படம் முடிந்துவிட்டது. அதில் மகாத்மா காந்தியின் படத்தையோ நேருவின் படத்தையோ போடவில்லை. காந்தி இல்லாமல் சுதந்திரமா?” என துரைமுருகன் கேட்க, சபாநாயகர் அப்பாவு “அவர்களுக்கு கோட்சே தானே” என்கிறார்.
அரங்கத்தில் கைத்தட்டல்கள் பறந்தன. தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “என்ன பண்றது தலைவரே... நீங்கள் சொல்லிவிட்டீர்கள் பரவாயில்லை. நாங்கள் அந்த வார்த்தையை பயன்படுத்த முடியாதில்லையா. இருக்கட்டும். உடனே பக்கத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின் என்னிடம், அண்ணே பார்த்தீர்களா காந்தியும் காணோம். நேருவையும் காணோம் என்றார். அதற்கு நான், இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நம்மையே காணாமல் அடித்துவிடுவார்கள். நாம் போய் சேர்ந்திடுவோம் என்றேன். காந்தியை காட்டாமல் யாருடைய பணத்தில் இதைக் காட்டுகிறார்கள். பாஜகாவாக இருந்தால் அந்த கட்சியில் போய் சேர்ந்துவிட வேண்டும்.” எனக் கூறினார்.