Skip to main content

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை; இந்திய ராணுவம் அதிரடி!

Published on 25/04/2025 | Edited on 25/04/2025

 

Indian Army in action Bandipora incident

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதோடு ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மேலும் ப்ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.  மற்றொருபுறம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் சில இடங்களில் பாகிஸ்தான் இராணுவம் சிறிய ரக துப்பாக்கிச் சூடுகளை நடத்தியிருந்தது. இதற்கு இந்திய ராணுவத்தின் சார்பில் திறம்பட பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி விரைவில் ஸ்ரீநகருக்குச் சென்றுள்ளார். இந்த பயணத்திப் போது அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மூத்த ராணுவத் தளபதிகள் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களின் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். பள்ளத்தாக்கில் நடந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் அங்குள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற முயற்சிப்பது குறித்து அவர் ஆய்வு செய்வார் எனக் கூறப்படுகிறது.

அதோடு இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற பஹல்காம் பகுதிக்குச் சென்று ராணுவத் தளபதி உபேந்திர திவேதி பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பந்திபோரா பகுதியில் தொட்ர்ந்து 4வது நாளாக பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அங்கு பதுங்கியிருந்த லஷ்கர் - இ - தொய்தா இயக்கத்தைச் சேர்ந்த டாப் காமாண்டர் சுட்டுக்கொல்லப்பட்டடதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு ஆதில் குரி மற்றும் ஆசிப் ஷேக் ஆகிய இரு பயங்கரவாதிகளின் வீடுகளையும்  இந்திய ராணுவத்தினர் தகர்த்தனர். 

சார்ந்த செய்திகள்