
ஜம்மு காஷ்மீரில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல கனவுகளோடு காஷ்மீருக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாத தாக்குதலால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்திய ராணுவப் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதே சமயம், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத கும்பலுக்கு பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகக் கூறி பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி முடிவுகளை இந்தியா தொடர்ந்து எடுத்து வருகிறது.
எஸ்விஇஎஸ்(SVES) விசாவில் தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் எனவும், பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எஸ்விஇஎஸ்(SVES) விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை இந்தியா பிறப்பித்தது.
இந்தியா பிறப்பித்த இந்த உத்தரவால், பாகிஸ்ஹானில் திருமணமான இந்தியப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. எல்லையைத் தாண்டி குடும்பங்களைக் கொண்ட இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களில் பலர், திடீரென தங்கள் பைகளை மூட்டை கட்டி பாகிஸ்தானுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் அவர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் பெற்றோர்களையும் வீடுகளையும் விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஒரு பெண் கூறுகையில், ‘48 மணி நேரத்திற்குள் நாங்கள் கிளம்ப வேண்டும் என்று கூறப்படுகிறது. அது எப்படி சாத்தியம்? அட்டாரி, ஜோத்பூரிலிருந்து 900 கி.மீ தொலைவில் உள்ளது. எங்களுக்கு பேருந்துகள் கிடைக்கவில்லை. டிக்கெட்டுகளுக்காக என் கணவர் ரூ. 1 லட்சத்தை இழந்துள்ளார். எனது பாஸ்போர்ட்டில் நான் இந்தியர் என்று இருக்கிறது. ஆனால் நான் பாதி பாகிஸ்தானியர். பயங்கரவாத தாக்குதலுக்கு நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன், ஆனால், சாமானிய மக்கள் என்ன தவறு செய்தார்கள்? எனக்கு, இந்தியாவும் பாகிஸ்தானும் முக்கியம். காரணமானவர்களை கடவுள் தண்டிப்பார்” என்று கூறினார்.
அதே போல் மற்றொரு பெண் கூறுகையில், ‘நான் ஒரு இந்திய குடிமகள், 10 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் திருமணம் செய்து கொண்டேன். என் இரண்டு குழந்தைகளும் இந்தியாவில் பிறந்தவர்கள், ஆனால் அவர்களிடம் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகள் உள்ளன. எனது சூழ்நிலையை தயவுசெய்து கருத்தில் கொண்டு எல்லையைக் கடக்க எனக்கு அனுமதி வழங்குமாறு நான் அரசாங்கத்தை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கெஞ்சினார்.
தற்போதைய எல்லை விதிமுறைகள்படி, பச்சை நிற பாஸ்போர்ட்டுகள் உள்ள பாகிஸ்தானிய குடிமக்களை மட்டுமே கடக்க அனுமதிக்கின்றன. இந்த சூழ்நிலையில், இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் பல பெண்கள், அட்டாரி-வாகா எல்லையில் கூடி, இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கின்றனர்.