
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழ்நாட்டில் வலிமை குறைந்தவர்கள் நம்மை ஆட்சி செய்தபோது, ஆதிக்க சக்தியும் அதிகாரமும் நம்முடைய மாநிலத்தின் மீது பாய்ந்து நமது உரிமைகளை எல்லாம் பறிக்கின்ற அந்தச் செயலை பார்த்திருக்கின்றோம். ஆனால் இன்றைக்குத் தமிழ்நாட்டை ஒரு அரசன் ஆளவில்லை; ஒரு வீரன் ஆளுகிறார். அந்த தலைவரின் வீரத்தையும், எங்களின் கல்வி சார்ந்து கருப்பொருளாக இருக்கும் அறிவாயுதத்தையும், கலைஞரின் வரிகளால் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தீட்டிய வாளும், தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது தீரர்களே! நான் தருகின்ற ஆய்தத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அறிவாயுதம்.. அறிவாயுதம்’.
அதேபோன்று எனது அரசியல் ஆசான் முதல்வர் ஸ்டாலின் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் இன்றைக்கு அறிவார்ந்த சமூதாதமாக மாற்றிக்கொண்டிருக்கிறார். நமது உரிமை பிரச்சனையாக இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் இந்தியாவில் இருக்கும் 20க்கும் மேற்பட்ட அரசியல் ஆளுமைகளை ஒன்று திரட்டி கூட்டம் நடத்தினார் நமது முதல்வர். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எல்லாம் புருவத்தை உயர்த்தி பார்க்கும் அளவுக்கு தனது பாதங்களை எடுத்து வைத்தார் ஒரு இளைஞர்; அவர்தான் துணை முதல்வர் உதயநிதி. ஒரு கல் எடுத்தார் இவ்வளவு பேர் சட்டமன்றம் வந்துவிட்டோம், ஒரு சொல் எடுத்தார் 40 பேர நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்” என்றார்.