Skip to main content

பூணூல் அணிந்திருந்ததால் தேர்வெழுத மறுப்பு; மாணவருக்கு இரண்டு ஆப்ஷனை வழங்கிய கர்நாடகா!

Published on 25/04/2025 | Edited on 25/04/2025

 

Karnataka government gives student two options after refusing to take exam for wearing a thread

கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அனைத்து கல்லூரிகளிலும் பொது நுழைவுத் தேர்வு (CET) நடைபெற்றது. அந்த வகையில், ஷராவதிநகரா பகுதியில் ஆதிசுஞ்சனகிரி இண்டிபெண்டனர் பியூ கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை எழுவதற்காக வந்த இரண்டு மாணவர்களை, நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்திய ஊர்க்காவல் படையினர், மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்பட்டது. இதற்கு அந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆசிரியர்கள் உடனடியாக அதில் தலையிட்டு, இரு மாணவர்களையும் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதித்தனர்.

மாணவர்களின் அணிந்திருந்த பூணூலை ஊர்க்காவல் படையினர் கழட்ட சொல்லும் சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையானது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, பூணூல் கழற்ற சொன்ன ஊர்க்காவல் படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் பிராமண சமூகத்தினர், போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், ஊர்க்காவல் படையினர் இரண்டு பேரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. 

மாணவர்களின் பூணூலை கழட்ட சொல்லி வற்புறுத்திய இது போன்ற சம்பவங்கள், கர்நாடகா முழுவதும் உள்ள பல தேர்வு மையங்களில் நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிதர் பகுதியில் உள்ள சாய் ஸ்பூர்த்தி கல்லூரியில் நடந்த பொது நுழைவுத் தேர்வின் கணக்கு தாளை எழுவதற்காக  சுசிவ்ரத் குல்கர்னி என்ற மாணவர் வந்துள்ளார். அப்போது அவர் பூணூல் அணிந்திருந்ததால், தேர்வு மைய ஊழியர்கள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இது பெரும் சர்ச்சையானது. மாணவரின் குடும்பத்தினர் மற்றும் பிராமண சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில், பொது நுழைவுத் தேர்வின் போது கணிதத் தேர்வை எழுத முடியாத அந்த மாணவருக்கு, கர்நாடகா அரசு இரண்டு மாற்று வழிகளை வழங்கியுள்ளது. பொது நுழைவுத் தேர்வு தரவரிசை நோக்கங்களுக்காக, கணிதத் தாளில் புதிதாகத் தேர்வு எழுதலாம் அல்லது இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடத்தில் அவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சராசரி மதிப்பெண்ணை ஏற்றுக்கொள்ளலாம் என இரண்டு வழிகளை கர்நாடகா அரசு மாணவருக்கு வழங்கியுள்ளது. 

சார்ந்த செய்திகள்