பாராளுமன்றத்தில் துணை நிதிநிலை அறிக்கை மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் புதன்கிழமை (4.12.19) மாலை சுமார் 5.30 மணியளவில் பேசினார்.
அப்போது அவர், '2019- 2020 பொது பட்ஜெட்டின் போது சுமார் 27.80 லட்சம் கோடி ஆண்டு செலவிற்கு அனுமதி பெறப்பட்டது. தற்போது 21,246 ஆயிரம் கோடி கூடுதல் செலவீனத்திற்கு நிதி ஒதுக்க விவாதம் நடைபெறுகிறது. இதன் மூலம் 3.3 சதவிகிதமாக எதிர்பார்க்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட பற்றாக்குறை தற்போது 3.7 சதவிகிதமாக உயரப்போகிறது. நாட்டின் மொத்த உற்பத்தி ஜி.டி.பி. 4.5 சதவிகிதமாக இருந்தது 4 சதவிகிதமாக குறைந்து விட்டது. 7.7 சதவிகிதமாக இருந்து, கடந்த 4 ஆண்டுகளாக குறைந்து தற்போது 4 சதவிகிதமாக ஆகியுள்ளது. பா.ஜ.க.வைச் சார்ந்த சுப்பிரமணிய சுவாமி எம்.பி ஜி.டி.பி 1.5 சதவிகிதம் தான். இது அதிகரித்து தவறாக சொல்லப்படுவதாக கூறுகிறார். எது உண்மை? நிதி அமைச்சர் தான் விளக்க வேண்டும்.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. 50 சதவிகிதம் பேர் வேலை பார்க்கக் கூடியவர்களுக்கு இந்தியாவில் வேலையில்லை. உற்பத்தியில் முதலீடு குறைந்து வருகிறது. குறிப்பாக தொழில் துறையில் முதலீடு குறைந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் கோடியாக 2023-ல் உயரும் என்ற இந்த அரசின் அறிவிப்பு இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும் நிறைவேற. 2033-34 - லாவது நடக்குமா என்பதே சந்தேகம்.
பிரதமர் அடிக்கடி வெளி நாடுகள் போய் வருகிறார். 100 தடவைக்கு மேல் 100 நாடுகளுக்கு மேல் போயிருப்பார். வெளிநாடு வாழ் இந்திய (என்.ஆர்.ஐ). பிரதமர் போல் வெளிநாட்டில் வலம் வருகிறார். பார்க்காத நாடுகள் குறைவு, பார்க்காத மாநிலம், மாவட்டங்கள் இந்தியாவில் நிறைய உள்ளது. வெளிநாடுகளில் இந்தியாவிற்கான வெளிநாட்டு முதலீடு F.D.I எவ்வளவு ஒப்பந்தம் இது வரை ஏற்பட்டுள்ளது எந்தந்த மாநிலங்களில் எவ்வளவு தொழிற் முதலீடு நடந்துள்ளது. எவ்வளவு தொழில்கள் மாநில வாரியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன? எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது, தமிழ்நாட்டில் எந்த வெளிநாட்டு முதலீடும் பெரிய அளவில் நிகழவில்லை.
பண பற்றாக்குறையை (Deficit Budget) நிவர்த்தி செய்ய, பொருளாதார சரிவை சரிகட்ட எல்லா அரசு பொதுத் துறை நிறுவனங்களையும் விற்க நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அரசு நிறுவனங்களில் அரசு முதலீட்டின் பெரும் பங்கை 51 சதவிகிதத்திற்கு மேல் அதிகம் தனியாருக்கு விற்பதால் அரசு சிறிய பங்குதாரராக மாற்றப்படுகிறது. இது இந்தியாவில் முதல் முறையாக இப்போது தான் நடக்கிறது.
நிதி அமைச்சர் திருச்சி பள்ளி, கல்லூரிகளில் படித்தவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு விற்க அரசு நடவடிக்கை எடுப்பதை நிதி அமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். தினச் சம்பளத்தை ரூபாய் 300-க்கு மேல் உயர்த்தி கிராமப்புற பெண்களுக்கு உதவ வேண்டும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு மாத பென்சன் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். மீனவர்களுக்கு மீன் பிடிக்காத காலத்தில் தரப்படும் உதவித் தொகை இறு மடங்காக உயர்த்தப்பட வேண்டும். 30 கோடி இளைஞர்களுக்கு நாட்டில் வேலையில்லை. தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு வேலையில்லை. வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை வழங்க வேண்டும்.
பாராளுமன்ற தொகுதியில் மக்களை சந்திக்க பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டித் தர வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா ரூபாய் 2 கோடி வீதம் அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி 3 கோடியாகாவும், கேரளாவில் 6 கோடியாகவும், டெல்லியில் 10 கோடியாகவும் உள்ளது. எனவே பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியை உயர்த்த வேண்டியது அவசியமாகும். இவ்வாறு பேசினார்.