சிபிஐ மாநில அலுவலகத்தை தரக்குறைவாக சித்தரித்ததை கண்டித்து சிதம்பரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
சிதம்பரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தை தரக்குரைவாக சித்தரித்ததைக் கண்டித்தும், தோழர் நல்லகண்ணுவை பற்றிய தவறான செய்திகளைச் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததையும், கட்சியின் பெண் செயற்பாட்டாளரை தரக்குறைவாக சித்தரிதிருப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் மூசா, நகர செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேகர், நகர செயலாளர் தமிமுன்அன்சாரி, திராவிட கழக தலைமை கழக பேச்சாளர் யாழ்திலீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை கீழ்தரமாக சித்தரித்த பாஜக, சங் பரிவார் கும்பல்களை கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்களையும் இழிவுபடுத்தும் செயலை பாஜக மற்றும் சங்பரிவார கும்பலை சார்ந்தவர்கள் செய்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. சிபிஐ தலைமை அலுவலகத்தை கீழ்தரமாக பதிவு செய்தவர்கள் மீது புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைவரும் ஒருங்கிணைந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் நிலை ஏற்படும்” என்றார்.