கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, என்.ஆர். காங்கிரஸ் ஒரு தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும், புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி என ஒதுக்கப்பட்டு, மேலும் சில கட்சிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது அதிமுக தலைமை.
தேமுதிகவை கூட்டணியில் இணைக்க வேண்டும் என அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது பாஜக. இந்த நெருக்கடியால் தேமுதிகவுடன் பேச துணை முதல் அமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தை அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. பாமகவுக்கு குறையாமல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதால் இழுபறி நீடித்தது.
இதற்கிடையே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியதுபோக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இதனால் விரைவில் கூட்டணியை உறுதி செய்து, தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
மேலும் கடந்த முறை 37 தொகுதிகளில் வெற்ற பெற்ற அதிமுக இப்போது ஏன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது? தேமுதிகவின் வருகையை எதிர்பார்ப்பது ஏன்? என்று அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர். அதோடு, அதிக தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கினால் கட்சிக்காரர்களும் வேலை பார்க்க மாட்டார்கள், வாக்குகளை அமமுகவும் பிரிக்கும். ஆகையால் ஒரு குறிப்பிட்ட தொகுதிகளை சொல்லி விருப்பம் என்றால் வரவும், இல்லையென்றால் இத்தனை தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியிட தயாராக உள்ளோம் என்று தேமுதிகவுக்கும், பாஜகவுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில்தான், தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதில் இரண்டு தொகுதிகள் தனித் தொகுதிகள் அல்லது தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள் என எடப்பாடி தூது அனுப்பியுள்ளாராம்.