விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று தமிழக அரசின் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டது.
பின்னர் கே.டி.இராஜேந்திரபாலாஜி பேசுகையில், ஆசிரியர்களை கௌரவபடுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆசிரியர் பணி எப்பொழுதுமே பெருமை வாய்ந்த பணியாகும். குறிப்பாக கடவுளை மக்கள் எப்படி நேசித்தார்களோ அதற்கு அடுத்த படியாக ஆசிரியர்களை மதிப்பார்கள்.
காரணம் ஒரு மாணவனின் எதிர்காலம் பெற்றோர்களைவிட ஆசிரியர் கையில் தான் உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் நிலையான சொத்து கல்வி ஒன்றே. அதை சரியான காலகட்டத்தில் சரியாக வழங்க கூடிய பணி ஆசிரியர் பணியே.
தமிழகத்தில் கல்வி சிறந்து விளங்குவதற்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்ளை அறிவித்துள்ளார். கல்விப்பணியில் மாணவர்களுக்கு காணொளி காட்சிகள் மூலம் தரமான முறையில் வகுப்புகள் நடத்துதல், பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் வளர்த்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர்தல், நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு வழிகாட்டுதல், மாணவர்களுக்கு ஒழுக்க நெறிகள் மற்றும் பிறர்க்கு உதவும் எண்ணங்களை வளர்த்தல் ஆகிய பணிகளில் ஆசிரியர் சிறந்து விளங்கி வருகின்றனர். அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.