திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் திமுக கோட்டை என மீண்டும் நிரூபிக்க கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எடுத்து வருகிறார்.
ஒருவருக்கு ஒரு பதவி என்று தன் தொகுதியில் தொடங்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி தற்போது நடந்து முடிந்த நகர, பேரூர் செயலாளர்கள் தேர்தலில் கிழக்கு மாவட்டம் முழுவதும் ஒரு சில இடங்களை தவிர அனைத்து இடங்களிலும் பேரூராட்சி தலைவராக இருப்பவருக்கு நகர, பேரூர் செயலாளர் பதவிக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர், பண்ணைக்காடு பேரூராட்சிகளில் தலைவராக இருக்கும் பேரூர் செயலாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரின் சொந்த ஊரான வத்தலகுண்டு ஒன்றியத்தில் நீண்ட இழுபறிக்குப் பின்னரே தற்போது செயலாளராக இருக்கும் ஒருவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாவட்டம் முழுவதும் பல புதியவர்களுக்கு எதிர்பாராத வாய்ப்பு பழையவர்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா எனப் பதற வைத்து வாய்ப்பு வழங்கியதன் பின்னணியை விசாரித்தபோது, திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஐ.பெரியசாமி தீவிரமாக திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கையில் இறங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. நகர, பேரூர் செயலாளர்கள் கட்சி வளர்ச்சிப் பணியில் மட்டும் ஈடுபட வேண்டும். நகராட்சி, பேரூராட்சி மன்ற செயல்பாடுகளில் தலையிடக் கூடாது. அதேபோல் நகர, பேரூராட்சி மன்றத் தலைவராக இருப்பவர்கள் கட்சி செயல்பாடு விஷயங்களில் மூக்கை நுழைக்க கூடாது. அவரவர் வேலையை அவரவர் கவனிக்க வேண்டும். கட்சித் தலைமை தரும் ஆக்கப் பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்த கட்டளையை மீறுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறிய படலாம் என்ற எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். இருப்பினும் முரசொலியில் அறிவிப்பு வரும் வரை மனு கொடுத்த பலர் தூக்கம் கெட்டுக் கிடப்பது உண்மை என்கின்றனர் திமுகவினர்.