நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. நாங்கள் என்ன வாக்குறுதி, சொன்னாலும் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். இதனை காங்கிரஸும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே செய்ய முடியும்.
புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெறவில்லை. நேற்று வெளியான தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளது. 2024 தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதியளித்ததை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட ஆலைகள் ரேஷன் கடைகள் திறக்கப்படும்” எனப் பேசினார்.