
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (02/04/2025) சட்டப்பேரவையில் கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வலியுறுத்தி தனி தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது 'வாஜ்பாய் அரசில் திமுக அங்கம் வகித்த பொழுது ஏன் கச்சத்தீவை மீட்க திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். 2021 ஆம் ஆண்டும் முதல் இந்த விவகாரத்தில் திமுக அரசு என்ன செய்தது' என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர், ''எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வேகமாக ஆளக்கூடிய திமுகவை குறை சொல்லி சில செய்திகளை பதிவு செய்திருக்கிறார். எங்களை பார்த்து கேட்கிற நீங்கள் 10 ஆண்டுகள் அவர்கள் கூட்டணியில் இருந்தீர்கள் அப்பொழுது என்ன செய்தீர்கள். இது தொடர்பாக நாங்கள் கிட்டத்தட்ட 54 கடிதங்கள் எழுதி அழுத்தம் கொடுத்திருக்கிறோம். பிரதமரை நேரடியாக சந்திக்கும் போதெல்லாம் கச்சத்தீவு மீட்பை வலியுறுத்தி பேசுகிறோம். இப்பொழுது கூட அண்மையில் நீங்கள் டெல்லி போனீர்களே அப்போது இதைப் பற்றிப் பேசினீர்களா?' என கேள்வி எழுப்பினார்.
இப்படியான காரசார விவாதங்களுக்கு பின் முதல்வரின் தனி தீர்மானமான கச்சத்தீவை மீட்க வலியுறுத்தும் தீர்மானம் அதிமுக, பாஜக கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற ஆதரவளித்த அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பில் இதயபூர்வமான நன்றி என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ''இப்பொழுது கொண்டு வந்துள்ள கச்சத்தீவு தீர்மானம் மீனவர்களை ஏமாற்றும் செயல். மீனவர் நலன்; கச்சத்தீவு குறித்துப் பேசிய திமுகவிற்கு தகுதி இல்லை. கடந்த 2008-ல் இருந்து 2011 ஆம் ஆண்டு வரை மாநிலத்தில் திமுக ஆட்சி இருந்தது. மத்தியில் நடைபெற்ற ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது. ஜெயலலிதா சார்பில் கச்சத்தீவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் இணைத்துக் கொண்டிருந்தால் கூட பரவாயில்லை. அப்படி என்றால் இவர்கள் எப்படி மீனவர்கள் மீது அக்கறை கொண்ட அரசாக இருக்க முடியும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்'' என்றார்.