தமிழக அரசுக்கு முத்திரைச் சின்னம் தந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி வார்டுகளைப் பொறுத்தமட்டிலும் திமுக ஆதரவு வாக்குகளே அதிகம். இத்தனைக்கும் சட்டமன்றத் தேர்தலில், இத்தொகுதியில் 7 தடவை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தாமரைக்கனி காலத்திலும்கூட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்மன் அதிமுகவாக இருந்தாலும், வார்டுகளில் அதிகமாக வெற்றிபெற்ற கவுன்சிலர்களின் ஆதரவில் வைஸ்-சேர்மன் பொறுப்புக்கு வருவது திமுகவாக இருந்தது.
ஆளும்கட்சி ஓட்டுக்கு ரூ.500 தந்து, ஒருவேளை அதிமுகவும் அதே ரீதியில் வாக்காளர்களைக் கவனித்து வெற்றிபெற்றாலும், அதிமுக கவுன்சிலர்கள் விலைபோகும் வாய்ப்பு உள்ளது.
அதிமுக சேர்மன் வேட்பாளர் எனச் சொல்லப்படும் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் போட்டியிடும் 32-வது வார்டில் எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுரேஷ், அவருக்கு ‘டஃப்’ கொடுப்பவராக இருக்கிறார். 5-வது வார்டில் போட்டியிடும் திமுக சேர்மன் வேட்பாளர் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள ரவிகண்ணன், அதிமுக வேட்பாளரான ஆணழகனை (இன்பத்தமிழனின் தம்பி) வலுவாகத் திணறடிக்கிறார். முன்னாள் திமுக எம்.எல்.ஏ. தங்கத்தின் மகன் என்பதும், செழிப்பான பின்னணி உள்ள பயில்வான் கிருஷ்ணசாமி தேவரின் பேரன் என்பதும் ரவிகண்ணனின் பலமாக உள்ளது. பயில்வான் கிருஷ்ணசாமி தேவர் ‘எத்தனை கோடி பணம் வேண்டும்? நான் தருகிறேன். மகள் வயிற்றுப் பேரன் ரவிகண்ணன் சேர்மன் சீட்டில் உட்காரவேண்டும்.’ என்று ஆர்வம் காட்டி வருவதாக உற்சாகத்துடன் சொல்கிறார்கள், உடன்பிறப்புகள்.
அன்று தாமரைக்கனியிடம் எதிரரசியல் செய்த கே.கே.எஸ்.எஸ்.ஆர், இன்றுவரையிலும் அக்குடும்பத்தினருக்கு எதிரான மனநிலையிலேயே இருக்கிறார் என்பதை சம்பந்தப்பட்டவர்களே கூறிவரும் நிலையில், ‘எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். இன்பத்தமிழனை தோற்கடித்தே ஆகவேண்டும்.’ என ஸ்கெட்ச் போட்டுத் தந்துவிட்டாராம்.
சில வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றாலும், கவுன்சிலர் எண்ணிக்கையிலும், சேர்மன் நாற்காலியில் அமர்வதிலும், திமுகவின் ‘உயரம்’ கண்முன்னே தெரிகிறது.