Skip to main content

இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியா?

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

தி.மு.க.வின் மூத்த முன்னோடி அன்பில் தர்மலிங்கத்தின் சிலை திறப்புவிழா. அதேநாளில் திருச்சி மாவட்ட தி.மு.க.வின் கலைஞர் மாளிகையில் அண்ணா, கலைஞர் சிலை திறப்பு, அதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா... என "முப்பெரும் விழா', கடந்த 10-ஆம் தேதி திருச்சியில் நடந்தது. அண்ணா, கலைஞர், அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்புவிழா மேடையில் வழக்கத்திற்கு மாறாக, மு.க.ஸ்டாலினுடன் உதயநிதியும் சபரீசனும் இருந்தனர்.

 

dmk



தென்னூர் உழவர் சந்தையில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்ட மேடையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் வரிசையில், கட்சியில் எந்தப் பதவியும் இல்லாத உதயநிதிக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. மேடையின் முன்பு முதல் வரிசையில் ஐ.டி. விங் நிர்வாகிகளுடன் அமர்ந்திருந்தார் ஸ்டாலின் மருமகன் சபரீசன். மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் அனைவருக்கும் சால்வை போர்த்திய தி.மு.க. மா.செ. கே.என்.நேரு, கீழே அமர்ந்திருந்த சபரீசனுக்கும் சால்வை போர்த்த தவறவில்லை.

 

dmk



கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ""கடந்த சட்டமன்றத் தேர்தலில் மகேஷ் பொய்யாமொழிக்காக திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்த நான், இந்த எம்.பி. தேர்தலில் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்தேன். உள்ளாட்சித் தேர்தலில் தெருத் தெருவாக பிரச்சாரம் செய்வேன். தமிழக சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் பிரச்சாரத்திற்கு தயாராக இருக்கிறேன். தி.மு.க. குடும்பக் கட்சிதான். ஆமா அன்பில் தர்மலிங்கம் தாத்தா மகேசுக்கு மட்டுமல்ல, எனக்கும் தாத்தாதான். எனது தாத்தா கலைஞர் எனக்கு மட்டுமல்ல, இப்போதிருக்கும் தி.மு.க. இளைஞர்கள் அனைவருக்கும் தாத்தாதான்''’என பேசியவர், ""இங்கே இருக்கும் திருநாவுக்கரசருக்கு ஒரு கோரிக்கை, நாங்குனேரியை தி.மு.க.வுக்கு விட்டுத்தாருங்கள், வென்று காட்டுவோம்''’என்றபோது எழுந்த கரகோஷம் அடங்க வெகுநேரம் ஆனது.


இறுதியாகப் பேசிய மு.க.ஸ்டாலின், எட்டுவழிச் சாலையால் கிடைக்கும் மூவாயிரம் கோடி கமிஷனுக்காக கொள்கையற்ற சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. நீட் தேர்வால் கடந்த ஆண்டு இரண்டுபேரை பலி கொடுத்தோம். இந்த ஆண்டு மூன்றுபேரை பலி கொடுத்திருக்கிறோம். 37 எம்.பி.க்கள் ஜெயித்து என்னசெய்யப் போகிறார்கள் எனக் கேட்கிறார்கள். நாடாளுமன்றம் கூடும்போது தெரியும் நாங்கள் என்ன செய்வோம் என்று. சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் ஒரு மரணஅடியைக் கொடுத்து, எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்''’என ஆவேசமானார். நாங்குனேரி தொகுதியில் காங்கிரசுக்குப் பதில் தி.மு.க. போட்டியிட்டால், உதயநிதிக்கு மக்கள் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் களமிறக்கி ஜெயிக்கலாம். அதன்பின் தி.மு.க. இளைஞரணி பொறுப்பைத் தரலாம் என மேல்மட்ட பேச்சுகள் விறுவிறுப்பாகியுள்ளன.

 

சார்ந்த செய்திகள்