விருதுநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டுள்ளார்.தற்போது தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திரபாலாஜி. இவர் விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தார். இந்நிலையில் அவரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கட்சி பதவியில் இருந்து நீக்கியது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் நீக்கத்துக்கு பல கரணங்கள் அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக ரஜினிக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்றும், சசிகலாவிற்கு விசுவாசமாக உள்ளார் என்றும் கூறிவருகின்றனர். இதனையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிவிட்ட ட்வீட் பாஜகவிற்கு ஆதரவாக இருப்பதால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து தப்பிக்க வைக்க டெல்லி பாஜக வட்டாரங்கள் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் பாஜகவின் டெல்லி வட்டாரங்கள் அதிமுக தலைமையிடம் பேசி வருவதாகவும் சொல்கின்றனர். ஒருவேளை ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டால் அவரை பாஜகவில் இழுக்கவும் டெல்லி வட்டாரங்கள் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்து வருவதால் அவரை பாஜக மறைமுகமாக இயக்குவதாக அதிமுக தலைமை உற்று கவனித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.