Skip to main content

“கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுட்டுப் போயிருக்காரு...” - விஜய பிரபாகரன் உருக்கம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Vijayaprabhakaran campaigned in Virudhunagar

சிவகாசியில் அஇஅதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றிய இந்தக் கூட்டத்தில், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.

“இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம்.  எங்க அப்பா கேப்டன்,  விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய்,  இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒருநாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம். எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுபோச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு. அப்போ இது யாரோட ஆசை, கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு ஆண்டவர் சொல்லிருக்காரு போல.

நிறைய பேர் சொன்னாங்க. விஜய பிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு? பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு . ராமானுஜபுரத்துல தான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்க தான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப் பெருமையா நினைக்கிறேன். கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றிருக்காரு.  என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படணும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது,  அதிமுக எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல.  ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான்,  கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதே மாதிரி  அதிமுகவுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க. எனக்கு உள்ள வரும்போது தேமுதிக, அதிமுக எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன்.

இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள் தான் ஜாஸ்தி.  இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018ல கேப்டன் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல,  அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளரா உங்க முன்னாடி பேசும் போது ரொம்ப சந்தோஷம் அடையறேன். இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு.  அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதனால அந்த வார்த்தை தெரியும்,  சிவகாசிதான் சின்ன ஜப்பான்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா.. அவ்ளோ திறமைசாலிகள் வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க.

இன்னைக்கு சைனா ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வு காண முடியும். அதிமுக - தேமுதிக கூட்டணி முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் கேப்டன் மகனா,  எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.” எனப் பேசி சைகையால் முரசு கொட்டினார் விஜய பிரபாகரன்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

“கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது” - இ.பி.எஸ்.!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
“Should not charge for summer training camp” - EPS

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் நடத்தும் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டம் தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும். இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடைபந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பிற்கு, விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.

தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்துவோம், தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கு பெறுவதை ஊக்குவிப்போம் என்றும், அதற்காக மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதம மந்திரியை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் கூறும் திமுக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டியில் ஆர்வமுள்ள, துடிப்புமிக்க மாணவர்களை முடக்கிப் போடும் இந்த அரசின் அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். விளையாட்டை ஊக்கப்படுத்துவோம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே, மறுபக்கம் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், வழக்கம்போல் கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.