நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நேற்று (27-10-24) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட த.வெ.க தலைவர் விஜய், தனது கட்சி கொள்கை குறித்தும், கட்சியின் செயல்பாடு குறித்தும் பேசியிருந்தார். , மதச்சார்ப்பற்ற சமூக நீதி, ஆட்சி அதிகாரம், இருமொழிக் கொள்கை, தன்னாட்சி உரிமை, மதச்சார்பின்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தீண்டாமை ஒழிப்பு, உற்பத்தி திறன், போதையில்லா தமிழகம் உள்ளிட்ட பல கொள்கைகளை முன்னிறுத்தி விஜய் பேசியிருந்தார்.
மேலும் அவர், பிரித்தாலும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம், ஊழல் மலிந்த அரசியல் ஆகியவை தான், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் எதிரி என்று கூறியிருந்தார். இது குறித்து பேசிய விஜய் , “நம்முடைய இயல்பான அடிப்படையான கோட்பாட்டிற்கு எதிராக இருக்கிற மாதிரி மக்களை மதம், சாதி, இனம், மொழி பாலினம், ஏழை, பணக்காரன் என்று சூழ்ச்சி செய்து பிரித்தாலும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் நம்முடைய அரசியல் எதிரி. நம்முடைய ஒரு எதிரி இனவாத சக்திகள் என்றால், நம்முடைய இன்னொரு எதிரி ஊழல் கபடத்தாரர்கள். மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். இங்கு யார் வரவேண்டும் யார் வரக்கூடாது. இது மதச்சார்பின்மையைப் பேசுகிற தமிழ்நாட்டு மண். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் பிறந்த மண். சாதி இருக்கும். அது சைலண்டாக மட்டும் தான் இருக்கும். சாதி சமூக நீதிக்கான அளவுகோலாக மட்டுமே இருக்கும். அதனை வைத்து வேற மாதிரி முயற்சி செய்தாலும் அதனை நம் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்த மண்ணில் அது அரசியல் தியரி நிரூபிக்கப்பட்டது” என்று பேசினார்.
பா.ஜ.க மற்றும் திமுகவை மறைமுகமாக விமர்சித்து விஜய் கூறிய கருத்து குறித்து பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பா.ஜ.கவின் பி டீம்தான் விஜய். ரஜினி அரசியலுக்கு வராததால் பா.ஜ.க தான் விஜய்யை இறக்கியிருக்கிறதோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விஜய் மற்றவர்களை குறை சொல்லும்போது, தான் உண்மையாக இருக்க வேண்டும். வருமான வரிச் சோதனையில் சிக்கியபோது விஜய்க்கு ஆதரவாக திமுக தான் குரல் கொடுத்தது” என்று கூறினார்.