
சில தினங்களுக்கு முன்பு பாலியல் வழக்கு ஒன்று அலகாபாத் நீதிமன்றத்திற்கு வந்த போது, ஒரு பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது, அவரின் ஆடைகளை கலைத்து இழுக்க முயற்சிப்பது பாலியல் வன்கொடுமையோ அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டுகளாகாது என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தது. அலகாபாத் நீதிமன்ற நீதிபதி கூறிய சர்ச்சைக்குரிய கருத்து நாடு முழுவதும் விவாதப்பொருளாக மாறியது. இந்த கருத்து குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், வேதனை தெரிவித்ததோடு இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், அலகாபாத் நீதிமன்றம் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்த முதுகலை மாணவி ஒருவர், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கடந்தாண்டு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘தனது பெண் தோழிகளுடன் ஒரு பாருக்குச் சென்ற போது நிஷ்சல் சந்தக் என்பவர் அறிமுகமானார். அதிகாலை 3 மணி வரை மது அருந்திய பிறகு குடிபோதையில் இருந்த தன்னை, அவரது இல்லத்திற்கு வருமாறு தொடர்ந்து வற்புறுத்தினார். அவரது தொடர்ச்சியான வேண்டுகோளின் பேரில், அவருடன் அவரது இல்லத்திற்கு ஓய்வெடுக்க செல்ல ஒப்புக்கொண்டு பயணம் செய்த போது தகாத முறையில் தொட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். மேலும், அவரது இல்லத்திற்கு அழைத்து செல்வதற்குப் பதிலாக, ஒரு உறவினரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், நிக்ஷல் சந்தக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சிறையில் இருந்த அவர், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அலகாபாத் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனுவில், அந்த பெண் ஓய்வெடுக்க விரும்பி தனது விருப்பத்தோடு தான் வந்தார். அவரை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. மாறாக, அவர் சம்மதத்துடன் தான் உறவு மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். அந்த மனு மீதான விசாரணை அலகாபாத் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர் தெரிவித்ததாவது, ‘பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டுகள் உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இந்த சம்பவத்திற்கு அவரும் பொறுப்பு என்று முடிவு செய்ய முடியும். பாதிக்கப்பட்ட பெண் முதுகலைப் பட்டதாரி மாணவி என்பதால், அவரது செயல்களின் ஒழுக்கத்தையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தவராகவும் திறமையானவராகவும் இருந்தார்’ என்று தெரிவித்து நிக்ஷல் சந்தக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.