கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து சித்தராமையா உரிமை கோரினார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாஜகவை வீழ்த்தி இழந்த ஆட்சியை காங்கிரஸ் கட்சி மீட்டெடுத்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தின் முதல்வர் யார் என்பதில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரிடையே போட்டி நிலவியது. இதனைத் தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் சித்தராமையா முதல்வர் என்றும், டி.கே.சிவகுமார் துணை முதல்வர் என்றும் காங்கிரஸ் தலைமை அறிவித்தது.
இதனையொட்டி பெங்களூருவில் நாளை மறுநாள் மிகவும் பிரம்மாண்டமாக பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைப்பேசியின் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக நாளை மாலை சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் பெங்களூரு செல்லவிருக்கிறார்.
இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து சித்தராமையா உரிமை கோரினார். துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள டி.கே.சிவக்குமாருடன் சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி சட்டமன்ற குழுவின் தலைவராக சித்தராமையாவை தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் அளித்து சித்தராமையா உரிமை கோரியுள்ளார். இச்சந்திப்பு சம்பிரதாயம் என்பதும் அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றது என்பதால் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.