"தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க நினைக்கும் பாஜகவிற்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்" என விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாகை சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போட்டியிட்ட ஆளூர் ஷாநவாஸ் வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து நேற்று (11.07.2021) நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் நாகை எம்.பி. செல்வராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஷாநவாஸ், நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், "பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து எல். முருகனை நீக்கியது கண்டிக்கத்தக்கது. எந்தப் பிரச்சனைகளும் இல்லாத தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு என்ன தேவை இருக்கிறது? சாதிய, மதவாதிகளின் கோரிக்கையை மக்களின் கோரிக்கைகளாக எண்ணி பாஜக தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள முயற்சிக்கிறது. வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவிற்கு தமிழகத்தில் பலத்த அடி கொடுக்க தமிழக மக்கள் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும், மாநிலங்களிலும் பல்வேறு அரசியல் யுக்திகளைப் பாஜக கையில் எடுக்கிறது. அது தேசநலனுக்கு உகந்தது அல்ல" என்று தெரிவித்தார்.