தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று வாக்குகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை மாவட்டம் வாரியாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது 11 மணி நிலவரப்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலரில் திமுக 264 இடங்களையும், அதிமுக 240 இடங்களையும் பெற்றுள்ளனர். அதே போல் ஒன்றிய கவுன்சிலரில் திமுக 2281 இடங்களையும், அதிமுக 2144 இடங்களையும், தினகரனின் அமமுக கட்சி 90 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் 5% சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் தினகரன் கட்சிக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்றும், உள்ளாட்சி தேர்தலில் அமமுக கட்சி சார்பாக போட்டியிட வேட்பாளர்கள் இல்லை என்றும் அதிமுகவினர் கூறிவந்தனர். இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலரில் 90 இடங்களை கைப்பற்றி அனைத்து அரசியல் கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதே போல் தினகரன் கட்சி கைப்பற்றிய பெரும்பாலான ஒன்றிய கவுன்சிலர் இடங்கள் அதிமுக செல்வாக்கு மிகுந்த இடங்கள் என்றும் கூறிவருகின்றனர். நேற்று அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை பேசும் போது, தினகரன் கட்சியால் அதிமுக ஒரு சில இடங்களில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்துள்ளது என்று கூறினார்.
மேலும் தினகரன் கட்சிக்கு பொதுச்சின்னம் இல்லாத காரணத்தால், மக்களவைத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் கடும் சரிவை சந்தித்த பின்னர் இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனையடுத்து தினகரனின் அமமுக கட்சி சரிவை சந்தித்த நிலையில், தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் 90 இடங்களை கைப்பற்றி கிராமப்புற பகுதிகளில் தினகரன் கட்சி செல்வாக்கை காண்பித்துள்ளனர். இதனால் அதிமுக கட்சிக்கு கிராமப்புற பகுதிகளில் தினகரன் கட்சியால் வாக்கு சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.