தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை பா.ஜ.க. என்ற வகையிலும், அரசியல் எதிரி தி.மு.க. என்ற வகையிலும் பேசி இருந்தார். மேலும், விஜய் தன்னுடைய உரையில் திராவிடமும், தமிழ்த் தேசியமும் இரு கண்கள் என்று கூறியிருந்தார். மேலும் இந்த மாநாட்டில் பேசும் போது பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.
முன்னதாக விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இருப்பினும் விஜய்யின் மாநாட்டின் உரையைத் தொடர்ந்து சீமான் த.வெ.க.வையும், விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போன்று அக்கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட நா.த.க. நிர்வாகிகளும் நடிகர் விஜய்யையும், அவரது கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால், சமூக வலைத்தளங்களில் த.வெ.க மற்றும் நா.த.க. கட்சியினரிடையே கடும் வார்த்தை போர் நடந்து வருகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு என்ற இடத்தில் இன்று (12.11.2024) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “எல்லோரும் ஒன்று தான், நிலம், மொழி, இனம் என எந்த பிரிவினையும் இருக்கக்கூடாது என்று பேசுகிறார். அப்படி என்றால் அவர் கட்சிக்குத் தமிழக வெற்றிக் கழகம் என விஜய் பெயர் வைத்தது ஏன்?. உலக வெற்றிக் கழகம், அகில உலக வெற்றிக் கழகம் எனப் பெயர் வைக்க வேண்டியது தானே?. கேரளாவில் ரசிகர்கள் அதிகம், ஆந்திராவில் ரசிகர்கள் அதிகம். எனவே இந்த கட்சியைக் கேரளாவில் ஆரம்பித்திருக்கலாமே?” என விமர்சித்துப் பேசினார்.