கடந்த உள்ளாட்சித் தேர்தல் வரை பேரூராட்சியாக இருந்த சோளிங்கர், தற்போது நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் நகராட்சியாக மாற்றம் செய்து அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்துள்ள தேர்தலில் திமுக 15 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடத்திலும், அமமுக 4 இடத்தில், பாமக இரண்டு இடத்தில், அதிமுக, சுயேட்சை இரண்டும் தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
நகர மன்றத் தலைவர் பதவி பொதுப்பிரிவில் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக மாவட்ட அவைத்தலைவர் அசோகன் தன் மனைவி தமிழ்செல்விக்கு சேர்மன் பதவியை தாங்கள் எனக் கேட்டுள்ளார். இந்த தேர்தலில் அவரும், அவரது மனைவியும் போட்டிப்போட்டு கவுன்சிலராகியுள்ளார். திமுக மெஜாரிட்டியாக இருப்பதால் சேர்மன் பதவியை கேட்கிறார்.
அசோகனுக்கு போட்டியாக 18வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோளிங்கர் நகர செயலாளர் கோபியின் தாயார் சுசீலாவும் எதிர்பார்க்கிறார். இவரது கணவர் மூர்த்தி ஏற்கனவே பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார்.
அசோகன், ஏற்கனவே நகர்மன்ற தலைவர் தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தவர். எம்.எல்.ஏ சீட் தரப்பட்டு தோல்வியை சந்தித்தவர். மக்கள் நம்பிக்கையை பெறாதவர். இதற்கு காரணம் 15 வருடங்களுக்கு முன்பு பேரூராட்சி கவுன்சிலராக அசோகன் இருந்தபோது, இவர் மீது புகார் வந்ததுள்ளது. அந்த புகாரில் இவருக்கு உடந்தையாக இருந்ததாக அப்போது சில பேரூராட்சி அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப்படிப்பட்ட மோசடிகளால் மக்கள் மத்தியில் மதிப்பை இழந்தவர்.
மாவட்ட கழக அவைத்தலைவர் என்பதால் சேர்மன் பதவிக்கு அசோகன் மனைவியை தேர்வு செய்துள்ளார் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான காந்தி. துணை சேர்மன் பதவிக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை செயலாளர் பழனியை தேர்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ள காங்கிரஸ் முனிரத்தினம், வைஸ் சேர்மன் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அமைச்சர் காந்தியிடம் கேட்டுள்ளார். எங்க கட்சிக்கு வேண்டும் எனச் சொல்லியுள்ளார். இது குறித்து தங்களது கட்சி தலைமை மூலமாக திமுக தலைமையை வலியுறுத்த பிப்ரவரி 28ஆம் தேதி சென்னை சென்றுள்ளார்கள் ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸார்.
சேர்மன் பதவியை அசோகன் குடும்பத்துக்கு தரக்கூடாது, அதிமுக ஆட்சியின்போது அமைச்சரை திமுக நிர்வாகியாக இருந்து கொண்டு தனது ரியல் எஸ்டேட் கம்பெனி மூலமாக செய்தித்தாளில் விளம்பரம் தந்து வரவேற்றவர். இவரால்தான் சோளிங்கர் தொகுதியில் திமுக வளரவில்லை. அவர் மனைவிக்கு சேர்மன் பதவி தருவதை மறுபரிசீலனை செய்யுங்கள் என அமைச்சர் காந்திக்கும், திமுக தலைமைக்கும் புகார்கள் சென்றுள்ளன.