Skip to main content

சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Shivraj Singh Chauhan resigns

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

அந்த வகையில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்டது. இதனையடுத்து மத்தியப் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜக சார்பில் மோகன் யாதவ் பதவியேற்க உள்ளார். போபாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான முந்தைய பாஜக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ் ஆவார். தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு 3 முறை எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

மேலும் துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்ரா, ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் மங்குபாய் சாகன்பாய் படேலை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

சார்ந்த செய்திகள்