தமிழகத்தில் அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த முகமது ஜான், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மரணமடைந்தார். அதேபோல ராஜ்யசபா எம்.பி.க்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் இருவரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றதால் அவர்கள் இருவரும் தங்களின் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்து விட்டனர்.
இதனால் தற்போது தமிழகத்தில் 3 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிகள் காலியாக இருக்கிறது. காலியாக உள்ள இந்த இடங்களுக்கு 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்திட வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறிகள் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் காணப்படவில்லை. ஆனால், மூன்று இடங்களுக்கான தேர்தலையும் ஒரே சமயத்தில் நடத்த திட்டமிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், நாடாளுமன்றத்தின் திமுக தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் வழக்கறிஞர் வில்சன் ஆகியோர், தேர்தல் ஆணையம் சென்று, தலைமைத்தேர்தல் ஆணையர் சுசில்சந்திரா மற்றும் ஆணையர்கள் ராஜிவ்குமார், அனுப்சந்திரபாண்டே ஆகியோரை சந்தித்து திமுக சார்பில் ஒரு மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், “ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே அந்த இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுவிட்டதால் அந்த இடங்களுக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டும். அந்த வகையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.
தற்காலிகமாக ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்தாமல் காலதாமதம் செய்வது தமிழக மக்களின் உரிமைகளை தேர்தல் ஆணையம் புறக்கணிப்பதாக அமைந்து விடும். எனவே, தமிழ்நாட்டில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள 3 ராஜ்யசபா இடங்களுக்கும் தனித்தனியாக தேர்தலை உடனடியாக தேர்தலை நடத்தி தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், பாஜகவை சேர்ந்த அமித்சா, ஸ்மிருதிராணி ஆகியோர் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் உருவான தற்காலிக ராஜ்யசபா காலியிடங்களுக்கு உடனடி தேர்தலை நடத்தியதையும் திமுக எம்.பி.க்கள் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.