திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக தமிழகம் முழுவதும் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய அண்ணாமலை, ''150 சதவிகிதத்திற்கு மேலே சொத்து வரியை உயர்த்தி உள்ளார்கள். சொத்து வரியை உயர்த்துவது மூலமாக சாதாரண மக்கள், வாடகை வீட்டில் வசிக்கும் மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகிறது, பொருளாதார மந்தம் எப்படி ஏற்படுகிறது என எல்லோரும் சொன்னார்கள். குறிப்பாக திமுக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாகச் சொல்லியிருந்தது. ஆனால் பெட்ரோலுக்கு மட்டும் 3 ரூபாய் குறைத்துள்ளார்கள். பிரதமர் மோடி நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை குறைத்துள்ளார்கள்.
புதுச்சேரிக்கு அருகாமையிலே என் வீடு இருக்கிறது. பார்டரை தாண்டி விட்டால் ஒரு லிட்டர் பெட்ரோல் 96 ரூபாய் பார்டருக்கு இந்த பக்கம் தமிழகத்தில் 102 ரூபாய் 72 காசு. 6 ரூபாய் வேறுபாடு இருக்கிறது. தமிழகத்தில் டீசல் 94 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் ஜஸ்ட் பார்டரை தாண்டி புதுச்சேரி சென்றால் 86 ரூபாய் ஒரு லிட்டர் டீசல். 8 ரூபாய் வேறுபாடு இருக்கிறது. இந்தியாவிலேயே 1967-க்கு பிறகு வந்த ஆட்சி, திராவிட மாடல் என்று சொல்லும் நீங்கள்... பிஹார், உத்தரப் பிரதேசம் பின்தங்கியுள்ளது எனச் சொல்லும் நீங்கள்... அங்கெல்லாம் 12 ரூபாய் பெட்ரோலுக்கு விலை குறைந்திருக்கும் பொழுது மார் தட்டிக் கொண்டிருக்கும் திமுக அரசு ஏன் விலையை குறைக்க முடியவில்லை.
1967-ல் இருந்து நாம்தான் (தமிழ்நாடு) முன்னே இருக்கோம் என்று சொல்கிறீர்கள். ஆனால் பிஹார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் நமக்கு பாடமெடுத்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் பெட்ரோல் விலையைக் குறைத்த பிறகு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் கூட பெட்ரோல் விலை குறைந்துள்ளது என்றால், இந்த திமுக அரசுக்கு மனசாட்சி இல்லை என்றுதானே அர்த்தம்'' என்றார்.