அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதால் அவரிடம் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை. அறுவை சிகிச்சை முடிந்தபின் விசாரணையை தொடங்கலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. விடுமுறை கால சிறப்பு அமர்வில் அமலாக்கத்துறை முறையிட்டது. அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது அவரிடம் செய்யக்கூடிய விசாரணைக்கு தடை ஏற்படுத்தும் படியாக இருக்கும். எனவே உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதங்களை முன் வைத்தார்.
ஆனால் நீதிமன்றம் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது. இந்த விவகாரம் தற்போது உயர்நீதிமன்றத்தில் உள்ளதாகவும் உயர்நீதிமன்றம் முதலில் முடிவெடுக்கட்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுத்த பின்னர் இது குறித்து விசாரிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும் உடனடியாக இந்த மனுவை விசாரிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது.