தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிந்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தேர்தல் முடிவுகள் குறித்து, திமுகவின் வியூக வகுப்பாளரான ஐ-பேக் பிரசாந்த் கிஷோரிடம் சமீபத்தில் விவாதித்தார். அந்த விவாதத்தில், 150 இடங்களுக்கு குறைவில்லாமல் திமுக வெல்லும் என்று பிரசாந்த் கிஷோர் சொன்னதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஸ்டாலினிடம் உற்சாகம் தெரிந்தது.
இதற்கிடையே, திமுக மா.செ.க்கள் பலரையும் தொடர்பு கொண்டு விசாரித்தார் ஸ்டாலின். அவர்களும் பூத் வாரியான நிலவரங்களை விவரித்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் சாதகமான ரிசல்டுகளையே தந்திருக்கின்றன.
இந்த சூழலில், வாக்குப்பதிவு முடிந்ததும், தமிழகத்தின் முழுமையான வாக்கு சதவீதத்தை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதில், மாநிலத்திலேயே மிக குறைவான வாக்கு சதவீதம் சென்னை பெருநகர சட்டமன்றத் தொகுதிகளில்தான் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை உட்பட வாக்குப்பதிவுகள் குறைவான மாவட்டங்களில் உள்ள திமுக மா.செ.க்கள் மற்றும் சம்மந்தப்பட்ட தொகுதிகளின் வேட்பாளர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு, ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அப்போது, “கரோனா பயத்தில் படித்தவர்களும் வயதானவர்களும் பூத்துக்கு வரவில்லை. மேலும், சீட் கிடைக்காததால் அதிருப்தியிலுள்ள திமுகவினர் வாக்காளர்களைப் பூத்துக்கு வரவழைக்கும் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை” என்று சில விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள் திமுக வேட்பாளர்கள்.
இதனால் கோபமடைந்த ஸ்டாலின், “தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாத அதிருப்தியாளர்களின் லிஸ்ட்டை உடனடியாக அனுப்பி வையுங்கள்” என்று உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அதிருப்தியாளர்களின் பட்டியலை தயாரித்து வருகிறார்கள் திமுக வேட்பாளர்கள். இதனையறிந்து பதற்றத்தில் இருக்கும் அதிருப்தியாளர்கள், பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறாமலிருக்க தேவையான முயற்சியில் இறங்கியுள்ளனராம்!