நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகர சி.பி.எம். கட்சியின் சார்பில், நகரின் தேரடி திடலில் அக்.12ல் அக்கட்சியின் தொண்டர்கள் திரள ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபி.எம். வட்டார செயலாளர் அசோக் ராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய கமிட்டி உறுப்பினரான வாசுகி கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தின் போது வாசுகி பேசியதாவது. ஆங்கில வழிக்கல்வி முறையில் தேர்வு எழுத வற்புறுத்தும், அனுமதிக்கிற நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை தேர்வு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு விட்டன. அதனை ரத்து செய்யக் கோரியும் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வலியுறுத்தியும் பல்கலைகழகம் முன்பு போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியிருக்கிறார்கள். அதில் மாணவர்கள் பலர் காயமுற்றிருக்கிறார்கள். அது கண்டிக்கத்தக்கது. மேலும் 10 மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கினை ரத்து செய்ய வேண்டும். நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டது, பத்திரிக்கை சுதந்திரம், பேச்சுரிமை கருத்துரிமை பறிக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது. கண்டனத்திற்குரியது என்று பேசினார்.