சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தங்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த 3வது நீதிபதி சத்யநாராயணன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அதிமுக எம்எல்ஏ செம்மலை நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில்,
எங்களுக்கு சாதமான தீர்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் எப்போதும் சொன்னதில்லை. நாங்கள் சொன்னதெல்லாம் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்றுதான் சொல்லி வந்தோம். அந்த நியாயமான தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
காரணம் என்னவென்றால், பேரவைத் தலைவர் முடிவில் நீதிமன்றம் தலையிடும் அளவிற்கு எந்த விதிமுறை மீறல்களும் இல்லை. அதனால் இது நியாயமான தீர்ப்பாக கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் நீதிக்கு புறம்பாக, சட்டத்திற்கு புறம்பாக சட்டப்பேரவைத் தலைவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
சட்டப்பேரவைத் தலைவர் 18 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தபோது என்னென்ன காரணங்கள் இருந்ததோ, அதைவிட மேலாக அவற்றை உறுதிப்படுத்தும் வகையில், அந்த 18 பேரின் செயல்பாடுகள் நடவடிக்கைகள், பேச்சுக்கள், அறிக்கைகள் இந்த ஒரு வருட காலத்தில் பத்திரிகை மூலமாக சொல்லி வந்தார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் 3வது நீதிபதி சத்தியநாராயணன் அவர்கள், இந்த 18 பேரின் ஒரு வருட கால நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டிருப்பார் என்று கருதுகிறேன். இதுவே போதுமான ஆதாரங்கள். அவர்கள் செயல்பாட்டிற்கு.
18 பேரும் டிடிவி தினகரனால் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்பதுதான் எனது பகிரங்கமான குற்றச்சாட்டு. சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது.
இன்று காலையில் கூட அவர்கள் தரப்பில் சொல்லிக்கொண்டது, ''தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும், வந்தால் 18 பேரில் ஒருவர்தான் முதல் அமைச்சராக நியமிக்கப்படுவார்'' என்று கற்பனை செய்து பார்க்க முடியாத, நடக்காத ஒன்றை அந்த 18 பேரை தொடர்ந்து சொல்லி தினகரன் ஏமாற்றி வருகிறார். 18 பேரையும் ஏமாளிகளாக்கிவிட்டார் தினகரன். இவ்வாறு கூறினார்.