நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி புதன்கிழமை, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து நம்மிடம் பேசிய தமிமுன் அன்சாரி,
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன். நாகூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில், காரைக்காலில் அமைந்துள்ள 'மார்க்' தனியார் துறைமுகத்தால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது., அங்கு நிலக்கரியை நிரந்தரமாக இறக்குமதி செய்ய தடை விதிக்க புதுவை அரசுக்கு, தமிழக அரசு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும், கடந்த மே 4 அன்று நாகூரில் சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்தின் போது, 64 பேர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. வலிமை வாய்ந்த அதிகாரங்களுடன் கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் தமிழக அரசு உறுதிக் காட்ட வேண்டும் என்று சொன்னவுடன், ''நானும் காவிரித் தண்ணீரை குடிப்பவன்தான். எனக்கும் அந்த உணர்வு உள்ளது'' என்று கூறிய அவர், ''தமிழக அரசு சார்பில் என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனை முயற்சிகளையும் செய்து வருகிறோம். நிச்சயம் காவிரியில் நல்ல தீர்வு கிடைக்கும்'' என்றார்.
காவிரிக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியபோது, அதை பரிசீலிப்பதாக கூறினார்.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கொடுத்ததைப்போலவே, ரமலான் நோன்பு கஞ்சிக்கு, தமிழக அரசு சார்பில் வினியோகிக்கப்படும் இலவச அரிசியை ,மே 15 தேதிக்குள் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கிடைக்க செய்யும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது, உடனே அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து அதற்கான உத்தரவுகளை தயார் செய்யுமாறு கூறினார்.
ஜாக்டோ, ஜியோ அரசு ஊழியர்களின் பிரச்சனைகளை சுமூகமான முறையில் பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுள் தண்டனைக் கைதிகளின் முன் விடுதலையை பாரபட்சமின்றி செய்துக் கொடுக்க வேண்டும் என்றும், பரோலில் செல்லும் கைதிகளுக்கு 'வழி காவல்' இன்றி நிம்மதியாக சென்று வர ஆவணம் செய்ய வேண்டும் என்றும் தமிழக சிறைகளில் உயிரிழக்கும் கைதிகளின் குடும்பத்தனரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டபோது அதனையும் பரிசீலிப்பதாக கூறினார்.
தொகுதிப் பிரச்சனைகள், தமிழக பிரச்சனைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை நேரில் வலியுறுத்த நினைத்தேன். ஆனால் முதல் அமைச்சரை பலபேர் சந்திக்க காத்திருந்தார்கள். 15 நிமிடம் சந்திப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டபோதும், இந்த சந்திப்பு 25 நிமிடம் வரை நீடித்தது. அனைத்து கோரிக்கைகளையும் குறிப்பெடுத்துக்கொண்டார். உதவியாளரிடமும் கோரிக்கைகளை குறிப்பெடுக்க சொன்னார். மிக இயல்பாக பேசினார். இவ்வாறு கூறினார்.