பெட்ரொல் டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதன் வாயிலாக இலவசமாக அரிசி, கோதுமையை ரேசன் கடைகளில் மத்திய அரசு கொடுக்கிறது என வானதி சீனிவாசன் கூறினார்.
பாஜக தேசிய மகளிர் அணி சார்பில், மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்த ஒரு கோடி பெண் பயனாளிகளுடன் செல்பி எடுக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் இத்திட்டத்தை தொடக்கி வைத்தார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாடாளுமன்ற தேர்தல் ஒரு புறம் இருந்தாலும் மத்திய அரசின் திட்டங்களால் பெண்கள் பயன் அடைந்துள்ளார்கள். அதுதான் எதார்த்தம். ஆளும் அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வது அக்கட்சியின் பணி. எனவே மகளிர் அணி மகளிர் பயனாளிகளை சந்திப்பது மிகப்பெரிய தொடர்புத் திட்டம். இத்தொடர்புத் திட்டத்தின் மூலம் தேர்தலுக்கு நாங்கள் தயாராகிக் கொண்டு உள்ளோம் என்பது எதார்த்தம்.
பெட்ரோல் டீசல் நம் நாட்டில் உற்பத்தி செய்வது இல்லை. பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது. நம்மை சுற்றியுள்ள நாடுகள் சீரிய மாற்றங்களை மேற்கொள்ளாததன் வாயிலாக இன்று அவர்கள் நாட்டில் உணவுக்கு கூட தட்டுப்பாடு வந்துள்ளது. பெட்ரொல் டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதன் வாயிலாக இலவசமாக அரிசி கோதுமையை ரேசன் கடைகளில் கொடுக்கிறோம். அதனால் பெட்ரோல் டீசலில் வரும் வருவாய் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளில் செலுத்துவதன் மூலம் அதிக வேலை வாய்ப்பு வசதிகளை மத்திய அரசு உருவாக்குகிறது. பெட்ரோல் டீசல் என்னும் ஒரு பகுதி மட்டும் அல்லாமல் மொத்தமாக பார்க்கும் பொழுது பெண்கள் அவர்களுக்கு கிடைக்கும் திட்டங்களில் அவர்கள் சந்தோஷமாக உள்ளார்கள்” எனக் கூறினார்.