மத்திய அரசு மின்சார சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் ஆற்றுநீர் பாசனம் இல்லாத காலங்களில் இலவச மின்சாரத்தின் உதவியால் நிலத்தடிநீர் பாசனத்தைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டுவருகின்றனர். தற்போது, மத்திய அரசு மின்சார பகிர்வு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனைக் கண்டித்து சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதேபோல், வடச் சென்னை பகுதியில் தண்டையார்ப்பேட்டை, மஹாராணி திரையரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டச் செயலாளர் திரவியம் ஆகியோர் கலந்துகொண்டு “விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே” என மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.