விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், முதல் மாநில மாநாட்டுக்குத் தமிழக போலீஸும் அனுமதித் தந்திருக்கிறது. இதனால், த.வெ.க. தொண்டர்கள் ஏக உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில், மாநாட்டு வேலைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த மாநில முதல் மாநாட்டில், அரசியல் வி.ஐ.பி.க்கள் பலரும் விஜய்யின் தலைமையில் இணைவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை விஜய் கட்சியின் முக்கியஸ்தர்கள் அணுகியுள்ளனர். அதிமுகவில் செஞ்சி ராமச்சந்திரனுக்கு போதிய முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதால், விஜய் கட்சியின் கோரிக்கையை நீங்கள் ஏற்கலாம் என அவரது நலன் விரும்பிகள் அறிவுறுத்தியிருப்பதால், செஞ்சி ராமச்சந்திரனும் விஜய் கட்சியில் இணைவது குறித்து விவாதிக்கவும், பரிசீலிக்கவும் செய்திருக்கிறார். இதனையடுத்து, த.வெ.க.வில் செஞ்சி ராமச்சந்திரன் இணையும் பட்சத்தில் அவருக்குக் கட்சியின் அவைத் தலைவர் பதவி கொடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
விஜயகாந்த், தே.மு.தி.க.வை ஆரம்பித்தபோது, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனைக் கட்சியின் அவைத் தலைவராக நியமித்தார். அதே பாணியில், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரான செஞ்சி ராமச்சந்திரனைத் தனது கட்சிக்குள் கொண்டு வரத் திட்டமிட்டு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கட்சியினருக்கு அறிவுறுத்தியிருக்கிறார் விஜய். அதன்பேரில், பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது. ஆக, விஜய் கட்சியின் அவைத் தலைவராகிறார் செஞ்சி ராமச்சந்திரன்.