கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவு ஏராளமானோர் உயிரிழந்து இந்தியாவையே உலுக்கியுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் முப்படையைச் சேர்ந்த வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட வீரர்கள் ஐந்தாவது நாளாக இன்றும் (03.08.2024) மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “கேரளாவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை நமக்கு வந்துள்ள எச்சரிக்கையாக பார்க்க வேண்டும். தூத்துக்குடியில் வெள்ளம் ஏற்பட்டபோது ராகுலும், பிரியங்காவும் ஏன் வந்து பார்க்கவில்லை?. தமிழகத்தில் 850 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் கூறினார்.