நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கேரளாவில் 30% தனியார்ப் பள்ளி மாணவர்களை அரசுப் பள்ளியை நோக்கி வரவைத்திருக்கிறார் பினராயி விஜயன். அது வளர்ச்சி” என்று தெரிவித்தார்.
சீமான் கூறியதாவது; “எதிர்க்கட்சியாக இருக்கும்போது ‘கோ பேக் மோடி’ ஆளும் கட்சியாக இருக்கும்போது, ‘வெல்கம் மோடி’ என்று சொல்வோம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ‘இந்தி தெரியாது போடா’ என்று சொல்வோம்; ஆளும் கட்சியாக இருக்கும் போது இந்திக்காரனே வாடா’ என்று சொல்வோம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது கருப்பு பலூன் விடுவோம், கருப்பு கொடி காட்டுவோம். ஆளும் கட்சியாக இருக்கும் போது கொடையவே வெள்ளையாக புடிப்போம்.
பொன்முடி கொரோனா நேரத்தில் அவரின் வீட்டு வாசலில், ‘மூடுங்கள் மதுக் கடையை மூடுங்கள்’ எனப் போராடினார். இப்ப அந்த கோஷத்தை எடுத்து போட்டால் அவர் அரசுக்கு எதிராக அவரே பேசுவதுபோல் ஆகிவிடும். இதே ஸ்டாலின், ‘மக்கள் யாரும் இலவசங்களை விரும்பவில்லை. அவர்கள், கல்வி, வேலை வாய்ப்பு, அதற்கேற்ற சம்பளம் இதைத்தான் கேட்கிறார்கள்’ என்று பேசினார். இதை நான் எப்போதும் பேசினால் உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆனால், நீங்க அப்போது ஒன்றும் இப்ப ஒன்றும் பேசுகிறீர்கள்.
கேரளாவில் 30% தனியார்ப் பள்ளி மாணவர்களை அரசுப் பள்ளியை நோக்கி வரவைத்திருக்கிறார் பினராயி விஜயன். அது வளர்ச்சி. அரசு ஏன் கல்வித்துறையை வைத்துள்ளது. அதற்கேன் இவ்வளவு நிதியை ஒதுக்கவேண்டும். தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘பள்ளிக்கூட கட்டடங்கள் சிதிலமடைந்து இருக்கிறது. அதனை புனரமைக்க நம்மிடம் நிதி இல்லை. தலைமை ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும் ஒருங்கிணைந்து உள்ளூரில் உள்ள கொடையாளர்களிடம் நிதியைப் பெற்று புனரமைத்துக் கொள்ளுங்கள்’ என்கிறார். பள்ளிக்கூடத்தை சீரமைக்க பணம் இல்லை; நினைவு சின்னம் வைக்க பணம் இருக்கிறது. இதனை கேட்டால் பதில் இல்லை” என்று தெரிவித்தார்.