
தமிழக அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் ஏற்பட்டு எடப்பாடி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. தற்பொழுது வரை அந்த வழக்கானது மேல்முறையீடு வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர் கோவை செல்வராஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசுகையில், ''சென்னையில் கடலில் மீன் குஞ்சு வளர்ப்பதாக வருடத்திற்கு 12 கோடி ரூபாய் மீன் வாங்கி விட்டதாக ஜெயக்குமார் சொன்னார். ஐந்து வருடத்தில் வாங்கிய 60 கோடி ரூபாய் பணத்தை அவர் அரசுக்குத் திருப்பி கொடுக்க வேண்டியது இருக்கும். வாக்கி டாக்கி வாங்கியதில் காவல்துறை பொறுப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியும், ஜெயக்குமாரும் பதில் சொல்ல வேண்டும்.
மூன்று மாத காலத்தில் இவர்கள் எங்கே இருப்பார்கள் என்று பாருங்கள். 3 மாதத்திற்கு பிறகு ஓபிஎஸ் தொண்டர்கள் கொண்ட கட்சியை நடத்துவார். குண்டர்கள் கொண்ட கட்சியை அவங்க நடத்திக்கிட்டு இருக்காங்க. அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. செப்டம்பர் மாதத்தில் எங்களுடைய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை சிதம்பரம் பூங்காவில் நடத்த இருக்கிறோம். சென்ற 11 ஆம் தேதி அவர்கள் நடத்திய ஒரு பொதுக்குழு செல்லாத பொதுக்குழு. தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்ததும் செல்லாது. அவரால் நியமிக்கப்பட்டதும் செல்லாது, நீக்கப்பட்டதும் செல்லாது'' என்றார்.