ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை குறைக்க வேண்டும் என்ற பிரதமரின் அறிவுறுத்தல் மற்றும் அழைப்பின் பேரில் இந்தியன் ஆயில் நிறுவனம் சிறப்பு முயற்சி ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, அந்த நிறுவனத்தின் சில பிரிவுகளில் பணியாற்றும் பணியாளர்களுக்காக பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி மூலம் உருவாக்கப்படும் பாலியஸ்டர் மற்றும் பருத்தியால் தயாரிக்கப்பட்ட சீருடைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சீருடைகள் கடந்த திங்கள் அன்று பெங்களூரில் நடந்த எரிசக்தி வார நிகழ்ச்சியில் பிரதமர் மோடியால் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது மறுசுழற்சி பாலியஸ்டர் மூலம் தயாரிக்கப்பட்ட உடை இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டது. நீல நிறத்திலான அந்த உடையை அணிந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றவும் மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் பிரதமர் இந்த ஆடையை அணிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் இந்த உடை குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘பயன்பாடு குறைப்பு, மறுபயன்பாடு, மறுசுழற்சி முயற்சிக்கு பிரதமர் மோடி கொடுக்கும் ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி. நாட்டுக்கான சேவையில் இவை எங்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும்’ என்றார்.