மஹாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் குறித்து அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம். அவர் நமக்கு அளித்த பதில்கள்.
எதிர்க்கட்சியான சரத் பவார் கட்சியிலிருந்து அஜித் பவார் வெளியே போய்விட்டாரே?
சரத் பவார் தன்னுடைய சொந்த மகளை உள்ளே சேர்த்தார். அதனால் அண்ணன் மகனான அஜித் பவார் இனி கட்சியில் இருந்து பிரயோஜனம் இல்லை என்று வெளியே சென்றுவிட்டார். இதோடு அஜித் பவார் மூன்றாவது முறையாகப் பதவி ஏற்றிருக்கிறார். அவர் அடிக்கடி வேறு வேறு கட்சிக்கு மாறுவார். இப்போது ஷிண்டே வெளியே போகப் போகிறார் என்று செய்தி வருகிறது. எத்தனை துரோகிகளைத் தான் பா.ஜ.க உருவாக்குவார்கள். முதலில் ஷிண்டே என்ற துரோகியை உருவாக்கினார்கள். அதே போல் இப்போது அஜித் பவார் என்ற துரோகியை உருவாக்குகிறார்கள். இதனுடைய விளைவு, பா.ஜ.க கட்சியில் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் இருக்கப் போவதில்லை மற்ற கட்சியினர் தான் இருக்கப் போகிறார்கள். இதன் மூலம், பா.ஜ.கவினர் தன்னுடைய தலையில் தானே மண்ணை வாரி இரைக்கப் போகிறார்கள்.
அந்த காலத்தில் கம்யூனிஸ்ட்கள் இந்தியாவிற்கு வரவே முடியாத நிலை இருந்தது. அப்போது வெற்றி பெறும் கட்சியில் இணைந்து அதிகாரத்தைக் கைப்பற்றி கம்யூனிசக் கொள்கைகளை பரப்பலாம் என்று திட்டம் போட்டார்கள். அந்த திட்டத்தினால் தான் மோகன் குமார் போன்றோர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்கள். அதில் வெற்றியும் பெற்று முக்கியமான இலாக்காக்கள் அனைத்தும் தன்வசம் வைத்திருந்தார்கள். அதே மாதிரி ஷிண்டேவும் அஜித் பவாரும் அந்த கட்சியில் இணைந்து அவர்களது கொள்கைகளை பரப்பக் கூடும். குலாம் நபி ஆசாத் போன்றோர்களை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். அவர் பரம்பரை பரம்பரையாக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர் தான். அவர்கள் உள்ளே சென்று காங்கிரஸ் கொள்கைகளை தான் பேசுவார்கள். அதனால் பா.ஜ.க கட்சி நீர்த்துப் போகப் போகிறது. இனி வரும் காலங்களில் பா.ஜ.க வில் உள்ளவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களாக தான் இருப்பார்கள்.
அஜித் பவார் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது போல் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று முறையிடுகிறார்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறதே?
ஏக்நாத் ஷிண்டே கூட அந்த கட்சியிலிருந்து வெளியே வர வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் பதவி வேண்டும் என்ற காரணத்தினால் தானே உத்தவ் தாக்கரை விட்டு வெளியே வந்தார். இப்போது அந்த பதவியையும் பாதி அஜித் பவாருக்கு கொடுத்துவிட்டால் ஏக்நாத் ஷிண்டேவிற்கு என்ன மரியாதை இருக்கிறது. அதனால் இன்னும் 10 நாள்களில் வெளியே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அஜித் பவார் கொண்டு வந்த ஆதரவாளர்களுக்கு பதவி கொடுத்து தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பதவி கொடுக்கவில்லை என்ற எண்ணம் ஷிண்டேவிற்கும் இருக்கும்.