சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவத்தில் உண்மைத்தன்மை கண்டறிய நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் இமானுவேல் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையை சேர்ந்தவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும், அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பகுதியை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அரசு செயல்பட வேண்டும்.
ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இமானுவேல் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு கணிசமான நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு பணி தர வேண்டும். அத்தோடு நடைபெற்ற சம்பவங்களின் உண்மைத்தன்மையை கண்டறிய நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.