அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் முரண்பாடுகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது எடப்பாடி அணியை எனவும், ஓபிஎஸ் அணி எனவும் அதிமுக பிரிந்து கிடக்கிறது. இந்த சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் பேசுகையில், ''தமிழக மக்களுடைய அன்றாட நிகழ்வில் ஏற்பட்டிருக்கக் கூடிய பின்னடைவுகள், அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஒரு எதிர்க்கட்சி என்ன முறையில் சட்டமன்றத்தில் அரசினுடைய கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமோ அதை செய்வோம். 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும், போட்டியிடும் தலைமை கழக நிர்வாகிகள் ஐந்து ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் எந்த நேரத்திலும் விதியை கொண்டு வரவில்லை. ஜெயலலிதாவும் அப்படி ஒரு விதியை கொண்டு வரவில்லை. இப்பொழுது வருகின்றவர்கள் தேவையில்லாத பிரச்சனை செய்கிறார்கள்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''சாத்தான் வேதம் ஓதக்கூடாது. இதை சொல்வதற்கு சில தகுதிகள் வேண்டும். அந்த தகுதி, தராதரம் ஓபிஎஸ்-க்கு இல்லை. சட்ட திட்டங்களை மாற்றலாமா மாற்றக்கூடாதா மாற்றினால் எம்ஜிஆருடைய ஆன்மா மன்னிக்காது என்று இன்றைக்கு சொல்கின்ற ஓபிஎஸ், அன்றைக்கு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பதவி ஆசையால் பதவி வெறி பிடித்து, முதலமைச்சர் பதவி தனக்கு இல்லை என்பதற்காக எந்த இயக்கம் அவருக்கு பதவி கொடுத்ததோ, எந்த இரட்டை இலை சின்னம் அவருக்கு பதவி கொடுத்ததோ, எந்த அதிமுக அவருக்கு சொத்து, சுகம், பதவி என அனைத்தையும் அளித்தததோ அந்த இயக்கத்தை முடக்க, எம்ஜிஆரால் கொண்டுவரப்பட்ட இரட்டை இலையை முடக்கியவர் ஓபிஎஸ்.
அப்படிப்பட்ட ஓபிஎஸ் இந்த இயக்கத்தை பற்றி பேசுவதற்கோ, எம்ஜிஆரைப் பற்றி பேசுவதற்கோ, ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கோ அருகதையே கிடையாது. சாதாரண உறுப்பினர் அட்டை வைத்துள்ள தொண்டனுக்கு இருக்கும் உரிமை கூட ஓபிஎஸ்-க்கு இல்லை. பராசக்தி வசனத்தை மனப்பாடம் செய்து கொண்டிருக்கக் கூடிய ஓபிஎஸ்க்கும், சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்ற ஓபிஎஸ்க்கும், இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நிலையில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என்று சொன்ன உங்கள் மகனுக்கும் இந்த அருகதையே கிடையாது'' என்றார் காட்டமாக.