குஜராத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப் பதிவானது நிறைவடைந்தது. அகமதாபாத், காந்திநகர் ஆகிய முக்கியப் பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி வரை நடந்த தேர்தலில் 58.68% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குஜராத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தேர்தலுக்குப் பின் வெளிவந்த கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக 128 முதல் 140 வரையிலான இடங்களைக் கைப்பற்றும் என ரிபப்ளிக் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. காங்கிரஸ் மொத்தம் 30 முதல் 42 இடங்களில் வெல்லும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. ஆம் ஆத்மி 2 முதல் 10 இடங்களை வெல்லலாம் என்றும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மற்றவை அதிகபட்சமாக 3 இடங்களைக் கைப்பற்றலாம் எனக் கூறியுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 117 முதல் 140 இடங்களைக் கைப்பற்றும் என்றும் ஆம் ஆத்மி 6 முதல் 13 இடங்களை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 6 முதல் 13 இடங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. என்டிடிவி செய்தி நிறுவனம் குஜராத்தில் பாஜக 128 தொகுதிகளையும் காங்கிரஸ் 44 தொகுதிகளையும் ஆம் ஆத்மி 7 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கூறியுள்ளது.
அதேபோல் இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 34 முதல் 39 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 28 முதல் 33 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் ஆம் ஆத்மி ஒரு தொகுதியைக் கைப்பற்றும் என்றும் ரிபப்ளிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. டைம்ஸ் நவ் நிறுவனம் இமாச்சலில் 38 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 28 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் மற்றவை 2 இடங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.
வரும் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.தேர்தல் நடைபெற்ற இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்புகள் சொல்வதால் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். அதே சமயத்தில் வெளியான கருத்துக் கணிப்பால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.