அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, தேமுதிக இணைந்திருந்தாலும், அக்கட்சியின் தொண்டர்களிடையே ஒற்றுமை இல்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.
''உங்க கட்சி வெற்றிப்பெற வேண்டுமானால் ஈகோவை விட்டுவிட்டு, இரு கட்சியின் தலைவர்களும் சந்தித்தால்தான் தொண்டர்கள் மத்தியில் இணக்கமான சூழ்நிலை உருவாகும்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியதையடுத்து, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் இருக்கும் மேடையில் ஏற மறுத்த ராமதாஸ், விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். ''விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரிக்க வந்ததாக'' செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் சுதீஷ், ராமதாஸை சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும், ''கள்ளக்குறிச்சியில் பாமகவினர் நமது கூட்டணிக்கு வேலை பார்க்கணும், திமுகவின் பொன்முடி அவரது மகனுக்காக களத்தில் இறங்கியுள்ளார். இந்த நேரத்தில் பாமக தொண்டர்களை நீங்கள் வேலை செய்ய சொன்னால் நன்றாக இருக்கும், நான் எம்பியாக நீங்க மனசு வைக்கணும்'' என்று கூறியிருக்கிறார் சுதீஷ்.
''அதையெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். எங்க கட்சித் தொண்டர்களைப் பற்றி நீங்க கவலைப்படாதீங்க'' என நம்பிக்கை கொடுத்து அனுப்பியுள்ளாராம் ராமதாஸ்.