கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த வைரஸ். அந்தவகையில் உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில், ந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 லிருந்து 17 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் 694 லிருந்து 724 ஆக உயர்ந்துள்ளது. இதில் இந்தியர்கள் 677 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என மொத்தம் 724 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 137, மகாராஷ்டிராவில் 130, கர்நாடகாவில் 55 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 43 லிருந்து 67 ஆக அதிகரித்துள்ளது.. மேலும் கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசார் முக கவசம் அணிந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க சிறையில் உள்ள சில குற்றவாளிகளுக்கு பரோல் வழங்கி உத்தரவு போட்டுள்ளது. அதே போல் இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க சிறையில் உள்ள குற்றாவளிகளுக்கு பரோல் வழங்க முன்வந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் கர்நாடகா மாநிலமும் இருப்பதால் சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறை நிர்வாகம் கண்காணித்து வருகிறது. இதனால் கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் உறவினர்களை சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதே போல் சிறையில் இருப்பவர்களிடமும் பேசுவதை தவிர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதோடு கரோனா வைரஸ் எதிரொலியால் சிறையில் கொடுக்கும் உணவுகளையும் கவனமாக எடுத்துக்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் கரோனா வைரஸ் எதிரொலியால் தற்போது பரோல் கேட்டு வரும் முடிவை சசிகலா தரப்பு தவிர்த்து வருவதாகவும் கூறுகின்றனர்.