Published on 13/09/2019 | Edited on 13/09/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் கட்சி படு தோல்வியை சந்தித்தது. இதனால் தினகரன் கட்சியிலிருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுக, அதிமுக கட்சியில் இணைந்து வந்தனர். இது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனையடுத்து கட்சியை வலுப்படுத்த வேண்டுமென்றால் சிறையில் இருக்கும் சசிகலாவை வெளியே கொண்டுவருவது தான் ஒரே வழி என்று தினகரன் நினைத்ததாக சொல்லப்படுகிறது. சசிகலா சிறைக்கு போய் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆவதால் நன்னடத்தை விதிகளின் படி, டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என தினகரன் தெரிவித்து இருந்தார். மேலும் சசிகலாவை வெளியில் எடுக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை என்று தினகரன் கூறியுள்ளார்.
மேலும் தினகரன் கட்சி மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் சிலரை சசிகலா சிறையில் சந்தித்தாக சொல்லப்படுகிறது. அப்போது கட்சியில் நடக்கும் பிரச்சனைகள் அனைத்தும் வெளியே வந்ததும் சரிசெய்து விடலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவிலும், அமமுகவிலும் மாற்றங்கள் வரும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். அதிமுகவில் தற்போது பொது செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சசிகலா வெளிவந்தால் தினகரன் கட்சிக்கு தலைமை ஏற்று அதிமுகவில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளை தன் பக்கம் கொண்டு வர முயற்சி எடுப்பார் என்று சொல்லப்படுகிறது. இதனை தவிர்க்க அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைத்து செயல்படலாம் என்று அதிமுகவில் சிலர் கூறிவருவதாக தெரிகிறது.